×

திருட்டில் ஈடுபட்டவரை சுற்றி வளைத்தபோது கர்நாடக போலீஸ் பிடியிலிருந்து வாலிபர் தப்பி ஓட்டம்: ஒரு துப்பாக்கி, 4 வளையல்கள் பறிமுதல்

திருப்போரூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த புறநகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துப்பாக்கி முனையில் வீட்டில் உள்ளவர்களை மிரட்டி கொள்ளையடித்த சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து பெங்களூரு புறநகர் பகுதியான புலிகேசி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அந்த பகுதியில் வசித்து வந்த பழைய குற்றவாளியான வில்லியம் என்பவரை கைது செய்தனர். அவனிடம் நடைபெற்ற விசாரணையில் கொள்ளை நடத்த பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் கொள்ளையடித்த நகைகளை திருப்போரூரில் உள்ள தனது நண்பர் விக்னேஷ் என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக வில்லியம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பெங்களூரு போலீசார், குற்றவாளி வில்லியம் உடன் நேற்று முன்தினம் இரவு திருப்போரூர் வந்தனர். வில்லியம் கொடுத்த தகவலின்பேரில் இரவு 9:45 மணி அளவில் திருப்போரூர் குளக்கரை அருகே உள்ள தனியார் பேக்கரியில் வேலை செய்து வந்த விழுப்புரம் மாவட்டம், குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (21) என்பவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதையடுத்து, அந்த நபர் தங்கி இருந்த திருப்போரூர் தெற்கு மாட வீதியில் உள்ள வீட்டை போலீசார் சோதனையிட்டனர். சோதனையில் கைத்துப்பாக்கி ஒன்றும், 8 சவரன் மதிப்புள்ள 4 வளையல்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, போலீசார் இருவரையும் அழைத்துக்கொண்டு திருப்போரூர் காவல் நிலையம் சென்றனர்.

2 குற்றவாளிகளையும் காரில் அமர வைத்துவிட்டு, அவர்களுக்கு பாதுகாப்பாக போலீசார் ஒருவரை நிறுத்திவிட்டு, பெங்களூரு போலீசார் காவல் நிலையத்திற்கு உள்ளே சென்று, மேற்கண்ட தகவல்களை தெரிவித்தனர். திருப்போரூர் காவல் நிலைய எல்லையில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 4 வளையல்களை பறிமுதல் செய்து குற்றவாளியை அழைத்து செல்வதாகவும் தகவல் தெரிவித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, காவல் நிலையத்திற்கு வெளியே காரில் அமர்ந்திருந்த விக்னேஷ். திடீரென காரை திறந்து கொண்டு தப்பி ஓடினான். பாதுகாப்புக்கு இருந்த போலீஸ் காவல் நிலையத்திற்கு உள்ளே சென்று கூச்சல்போட்டு குற்றவாளி தப்பி ஓடுவதாக கூறினார்.

இதையடுத்து பெங்களூரு போலீசாரும், திருப்போரூர் போலீசாரும் நான்கு புறமாக சென்று தப்பி ஓடிய விக்னேஷை தேடினர். ஆனால், விக்னேஷ் கிடைக்கவில்லை. இதையடுத்து கர்நாடக போலீசார், தாங்கள் அழைத்து வந்திருந்த குற்றவாளி வில்லியம் மற்றும் திருப்போரூர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 4 வளையல்களுடன் பெங்களூரு திரும்பிச் சென்றனர். மேலும், தங்களிடமிருந்து தப்பிச்சென்ற குற்றவாளியை பிடித்து தருமாறு திருப்போரூர் போலீசாரை கேட்டுக் கொண்டனர். இதையடுத்து பெங்களூரு போலீசாரிடமிருந்து தப்பிசென்ற விக்னேஷை திருப்போரூர் போலீசார் தேடி வருகின்றனர்.

The post திருட்டில் ஈடுபட்டவரை சுற்றி வளைத்தபோது கர்நாடக போலீஸ் பிடியிலிருந்து வாலிபர் தப்பி ஓட்டம்: ஒரு துப்பாக்கி, 4 வளையல்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Thiruporur ,Bengaluru ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்கியதால்...